பெரியப்பட்டிணம்
முத்து பவளக்கிராமத்தின் பண்டையத் துறைமுகம்
பெரியப்பட்டிணம் -ஓர் அழகிய பண்டையத்துறைமுகம்
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி மதுரை பாண்டியரது ஆட்சிக்கட்டில் உரிமை யாருக்கு என்பதில் பூசல் எழுந்தது. ஒருபுறம் பராக்கிரமபாண்டியன், மற்றொரு புறம் சடயவர்மன் குலசேகரபாண்டியன். குலசேகரபாண்டியனது முயற்சியை முறியடிக்க உதவிப்படை அனுப்புமாறு இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவிற்கு ஓலைகள் அனுப்பப்படுகின்றன, அனால் குலசேகரன் முந்திக்கொண்டு பராக்கிரம பாண்டியனை கொன்று அவனுக்குரிய மதுரை அரியணையை கைப்பற்றிக்கொண்டான்.. பண்டைய உறவுகள் பனிரெண்டாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தலால், இலங்கை மன்னன் பராக்கிரம பாகு, மதுரை பராக்கிரம பாண்டியனது உதவிக்கு பெரும் படையொன்றை அனுப்பி வைத்தார், அந்த படையணிகள் இலங்கையின் மேற்கு கரையில் உள்ள மாதோட்டம் என்ற துறைமுகத்தில் இருந்து இலங்காபுரி தண்டநாயகன் என்ற தளபதி தலைமையில் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டன. ஒரு இரவும் ஒரு பகலும் கடல் பயணத்தில் கழித்த அந்த படைகள் இராமேஸ்வரம் தீவில் தனபில்லா என்ற இடத்தில் கரை இறங்கின.அந்த இடம் இன்று இராமேஸ்வரத்திற்கு வடக்கே கந்தமாதானத்திற்கு வடகிழக்கே இரண்டு கல் தொலைவில் உள்ள புலியடி சாலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது, அவரை எதிர்கொண்ட குலசேகரனது படைகளை இலங்கைப்படைகள் அழித்து குந்துகால்(பாம்பன்), வடலி(வேதாளை) ஆகிய ஊர்களை கடந்து முன்னேறியது.அப்பொழுது குலசேகர பாண்டியன் மிகுந்த பீதியடைந்தவனாக கொங்கு, நெல்லை பகுதியில் இருந்து கொணர்ந்த பெரும்படைகளை கடல் வழியாகவும், தரை வழியாகவும் அனுப்பி பராக்கிரமபுரம் என்றும் பலம் வந்த தளத்தை எதிரிகளின் தாக்குதலிருந்து தவிர்ப்பதற்கு முயன்றான். .இத்தலம் நன்கு பலப்படுத்தப்பட்டு கோட்டை மதிலும் காலியிடனும் அமைந்து இருந்தது. இங்கு நடந்த போரிலும் இலங்கைப்படைகளே வெற்றியாளர்களாகத் திகழ்ந்தனர். அப்படி இந்தப் போர் நடந்த இடம் பராக்கிரமபுரம் என்று வரலாறு கூற்று படியும் இதை காலப்போக்கில் பராக்கிரமப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டதாக வரலாறு விரிவிக்கன்றது. அந்த பராக்கிரமப்பட்டிணம்தான் இன்றைய "பெரியப்பட்டிணம்"
பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனால் அல்லது பின்னர் அவனது நினைவால் இந்தப்பட்டிணம் நிலைபெற்று இருக்க வேண்டும். மதுரை பாண்டிய மன்னர்களில் பலர் பராக்கிரம பாண்டியன் என்ற பெயரில் இருந்து இருப்பதை சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என திருப்பத்தூர் திருக்கோவில் கல்வெட்டும், திருபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவன், தென்னன் பராக்கிரம பாண்டிய தேவன் எனகுருவித்துறை திருக்கோவில் கல்வெட்டுகளும் குறிப்பிடுவது இங்கு நினைவிற்கொள்ளுதல் நன்று. இவைகளில் இருந்து மதுரை ஆட்சி செய்த(கி.பி.1169 க்கு முன்னால்) பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனது ஆட்சியில் அமைந்தது அல்லது மன்னரது நினைவாக எழுந்தது இந்தப்பட்டினம் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். இந்த மன்னர் கி.பி.1143 முதல் 1166 வரை மதுரையில் ஆட்சி புரிந்தார். இந்தப்பட்டிணம் சில காலம் "பவித்திர மாணிக்கப்பட்டிணம்" என்றும் வழங்கி வந்ததை "தீன்நெறி விளக்கம்" என்ற இலக்கியம் தெரிவிக்கிறது.
கிபி.1187 இல் அரபு நாட்டில் இருந்து இஸ்லாமிக் சமய நெறியைத் தென்பாண்டிய நாட்டில் பரப்பும் பணியில் வந்த சுல்த்தான் சையது இபுறாகிம்(வலி) அவர்கள் மதுரைக்கோட்டையைப் பிடித்த பின்னர், இந்தப்பட்டிணத்தில் ஆட்சி செய்த விக்கிரம பாண்டியனைப் போரில் வீழ்த்தி, இந்தப்பட்டிணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய ஷரியத் ஆட்சியை நடத்தினார் என்பதை ஷஹீது சரிதை என்ற நூல் தெரிவிக்கிறது. மேலும் ஏர்வாடி தர்காவில் மீசல் வண்ணக்களஞ்சியப்புலவர் அவர்களினால், அரங்கேற்றம் செய்யப்பட்ட தீன் விளக்கம் என்ற இலக்கியத்திலும் இந்த பவித்திரமாணிக்கப்பட்டினம் இடம் பெற்றுள்ளது. மற்றும் இந்த ஊருக்குத் தென்மேற்கே எட்டு கல் தொலைவில் உள்ள திருப்புல்லாணித் திருக்கோயிலில் உள்ள கோனேரின்மை கொண்டான் திருபுவனைச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியனது (கி.பி.1216 முதல் 1224 வரை) எட்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டில் இந்த பவித்திரமாணிக்கப்பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னர் சுல்த்தான் சயீத் இபுறாகீம்(வலி) ஷஹீது அவர்களை கி.பி.1198 இல் வெற்றி கொண்ட விக்கிரமபாண்டியனை அடுத்து ஆட்சிக்கு வந்தவன், இந்த விக்கிரமபாண்டியன் என்ற பெயரால் சேது நாட்டு முதுகளத்தூர் பகுதியில் விக்கிரமபாண்டியபுரம் என்ற பெயரும், அருப்புக்கோட்டையில் விக்கிரமபாண்டியன் பெருந்தெருவும், இராமநாதபுரத்தை அடுத்த தெற்குதரவை என்ற ஊருக்கருவில் விக்கிரமபாண்டியவலசை என்ற ஊரும் இருப்பது இன்றும் நினைவிற்கொள்ளத்தக்கது. ஒரு காலத்தில் இந்தப்பட்டினத்தில் தூய மாணிக்கம் மிகுதியாகக் கிடைத்தமை கொண்டு இந்தப்பெயர் வந்திருக்கலாம், இத்துடன் இந்த ஊரின் மேற்குப்புறம் பவளக்கல் தரவை என்ற பெயரில் வழங்கப்பட்டதை இங்கு நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக உள்ளது. பவளமும் ஒரு வகையான மாணிக்கம்தான் என்பது உத்பல பரிமனம் என்ற நூலிலும் அக்கினி புராணத்திலும் குறிக்கப்பட்டு இருப்பதால் பவளம் மிகுந்த பகுதியையுடைய ஊர் என்ற குறிப்பில் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்ற புதுப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்,மேலும் இந்தப்பட்டிணம் அமைந்துள்ள கிழக்கு கடற்கரையின் தெற்கே சில கல் தொலைவில் கோனேரின்மை கொண்டான் திரிபுவனைச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தரபாண்டியனால்(கி.பி.1216) திருப்பணி பெற்ற மாரியூர்க் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இறைவியின் பெயரும் "பவள நிரவள்ளி" என்பதாகும். திருப்புல்லாணியிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான கடற்கரையில் பவளம் மட்டுமின்றி முத்தும் சங்கும் வளக்கொளித்ததை பல இலக்கியச்சான்றுகள் வழி மொழிகின்றன. இந்தப்பட்டிணத்திற்கு மேற்கே நான்கு கல் தொலைவில் அமைந்துள்ள திருப்புல்லாணி இறைவனை மங்கள சாசனம் செய்து திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் " பொழுது முந்நீர்க் கரைக்கே மணி உந்து புல்லாணியே" " புணரி ஓதம் பணிலம் மணி உந்து புல்லாணியே" " இலங்கும் முத்தும் பவளக் கொளுந்தும் எழில் தாமரைப்புலன்கள் முற்றும் பொழில் சூழ்ந்த புல்லாணியே" என மணியும் முத்தும் இந்தப்பகுதியில் மிகுந்து இருந்ததைக் குறிப்பிடுகிறார்.இவ்விதம் பராக்கிரமபட்டிணம் காலப்போக்கில் பவித்திரமாணிக்கபட்டிணமாகி, பின்னர் பெரியப்பட்டிணம் என்ற பெயர் தருவி உள்ளது. இவ்விதம் பாண்டிய நாட்டின் பெருந்துறைகளில் ஒன்றாக விளங்கிய பவித்திர மாணிக்கப்பட்டிணம் என்ற பராக்கிரமப்பட்டிணம் காலச்சுழற்ச்சியில் பெரும்பாலும் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருணையற்ற கடலின் அலைக்கரங்களால் அழிவை எய்தியது.
சூறாவளிக்காற்றில் சிக்கிச் சுழன்ற கடல் நீர், கடல் அடி மண்ணும் பெரியப்பட்டிணத்தின் கப்பலாற்றுக்குள் புகுந்தது. இப்பொழுது கப்பலாறு மட்டுமல்ல; பெரியப்பட்டிணத்தின் கோட்டைபகுதி அதனை அடுத்துள்ள குடியிருப்புகள் அனைத்தும் கடல் நீரால் சூழப்பட்டது. பட்டிணம் அழிந்தது பல நூற்றாண்டு காலப் பெருமையும் வலிமையும் வாய்ந்த அந்த கடற்கரை நொடி நேரத்தில் காட்சி தந்து மறைந்த பகற்கனவு போல எங்கேயோ அழிந்து விட்டது.பெரியப்பட்டிணத்துறைமுகத்தைக் கடலோடு இணைத்து வரலாற்றுச் சிறப்பை வழங்கி வந்த இயற்கையான கப்பலாறும் மேடிட்டு எழில் குறைந்து சிறிய தேக்கமாக மாறியது. வடக்கே யாழ்பாணத்தையும் வங்காள விரிகுடாக் கடலுக்கு தெற்கே உள்ள இந்து மாக்கடலையும் கிழக்கே தலைமன்னார் மற்றும் இலங்கைத் துறைமுகங்களையும் கடல் வழியாக இணைத்த கப்பலாற்றின் வாயை நிரந்தரமாக மணல் மேடிட்டு மூடியது. இந்தத்துறைமுகத்திலிருந்துதான் பாரசீக நாட்டு வளைகுடாவிற்கும், அரபு நாட்டுச் செங்கடலுக்கும், ஏமனுக்கும் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன என்பது பழங்கதை ஆகி விட்டது. இந்த உண்மைகளை உறுதி செய்யும் உலகப்பயணி இபின் பதூதாவின் (Ibn-Battuta) பெரியப்பட்டிணம் பற்றிய அறநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட பயணக்குறிப்புகள் இன்று நமக்கு கிடைத்திராவிட்டால் பராக்கிரமபட்டிணமாக இருந்து பெரியப்பட்டிணமாக மாறிய இந்தப் பெருநகர் பற்றிய உண்மைகளை பொய்யும் மெய்யும் கலந்த புராணச் செய்தியாக கருத வேண்டி இருந்திருக்கும்.
நமது சீமைக்கு கிழக்கே உள்ள வங்கக்கடல் பல நூற்றாண்டுகளாக வணிகர்கள் மற்றும் பயணிகளது நடமாட்டக்களமாக விகாங்கி வந்துள்ளது. கிரேக்கர், ரோமர், அரபிகள் என்ற இந்த வெளிநாட்டினர், கி.பி. முதலாவது நூற்றாண்டு முதல் இந்தப்பகுதிக்கு வந்து சென்றுள்ளனர்.கி.பி.1170 இல் இராமேசுவரம் தீவையும் அடுத்து பாண்டிய நாட்டின் கிழக்கு வடக்குப்பகுதிகளையும் சோழநாட்டின் தென் பகுதியையும் இலங்கை மன்னர் பராக்கிரம பாகுவின்(கி.பி.1153-86) படைகள் ஆக்கிரமித்து இருந்ததை இலங்கை வரலாறு மகாவம்சம் இலங்கை நாட்டு தம்போலா கல்வெட்டு மற்றும் தமிழகத்தின் பல்லவராயன்பேட்டை கல்வெட்டு அச்சரப்பாக்கக் கல்வெட்டு, இராமேஸ்வரம் கல்வெட்டு ஆகியவை தெரிவிக்கின்றன.
இந்த வரலாற்று நூலில் தான் இன்றைய பெரியப்பட்டினத்தை கோட்டை மதிலும் அதைச்சூழ்ந்த நகரமுமாக வரலாற்றில் பார்க்கலாம். இதனைக் கைபற்றிய இலங்கைப்படைகளை முறியடிக்க குலசேகர பாண்டியன் நீர்வழியாகவும், நிலவழியாகவும் பெரும்படை அனுப்பி வைத்த செய்தியும் அந்த நூலில் வரையப்பட்டுள்ளது.
இந்த ஊர் பற்றிய பழமையான குறிப்புகளைக் கொடுப்பது இலங்கை வரலாறாகிய மகாவம்சமே ஆகும்.
உலகப்பயணி மார்க்கோபோலோ (Marco-Polo)குறிப்புகள்(1254-1324):
ஸ்பெயின் நாட்டவரான இளைஞன் மார்க்கோபோலோ வெனிஸ் நகரில் கி.பி.1124 இல் பிறந்தார். பதினேழாவது வயதில் தமது தந்தையுடன் கிழக்கு நோக்கிப்பயணம் புறப்பட்டார். காடு, மலை,ஆறு, பாலை என எண்ணாயிரம் மைல் தொலைவினை நான்கு ஆண்டுகள் பயணம் செய்து சீனப்பேரரசர் குப்ளாய்கானது அரசவையை அடைந்தார். ஆடம்பரத்தையும், புதுமையையும் பேணி வந்த அந்த மன்னர் இளைஞர் மார்க்கோபோலோவைத் தமது உற்ற துணைவராகக் கொண்டிருந்தார். மன்னருடன் பரந்த சீன நாட்டில் பயணம் செய்து பல புதிய உண்மைகளை அறிந்து வைத்தார். மன்னரது பணியொன்றினை நிறைவேற்ற அவர் தாய்லாந்து, இலங்கை நாடுகளைக் கடந்து வந்த பொழுது அவர் நமது நாட்டிற்கும் வந்தார். அப்பொழுது பாண்டியரது தலைநகராக விளங்கிய காயல் நகரை மட்டும் குறிப்பிடுகிறார். மற்ற பகுதிகளைக் குறிப்பிடும்போது அவைகளின் பெயர்களை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சிலோன் புறப்பட்டு மேற்கு நோக்கிப் பயணித்தால் 60 மைலில் மாபர் என்னும் நிலப்பகுதி இந்தியாவின் நடுப்பகுதியாகும். சுந்தர பாண்டியன் மற்றும் நான்கு சகோதரர்கள் அரசர்களாக இருக்கின்றனர். இப்பகுதி உலகில் உன்னதமாக இருக்கும், இதை ஐந்து சகோதரர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக முடியுடை மன்னர்கள். அவர் பெயர் சுந்தரபாண்டிய தேவர். இங்கு மிகவும் அழகிய முத்துக்கள் கிடைக்கின்றன.இங்கே கடல் செயலான் (இலங்கை)தீவுக்கும் இந்தத் தரைபகுதிக்கும் இடையில் ஒரு குடாவாக அமைந்து இருக்கிறது. இந்த வளைகுடாப் பகுதி முழுவதும் 10 அல்லது 12 பாத்தம்வுக்கு கூடுதலாக ஆழம் இல்லை. சில இடங்களில் இரண்டு பாத்தம் ஆழமாக உள்ளன. முத்துகுளிப்பவர்கள்,, பெரிதும், சிறிதுமான தங்களது படகுகளில் இந்த வளைகுடாவிற்குச் சென்று ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து மே மாத நடுப்பகுதி வரை அங்கு தாமதித்து நிற்பார்கள்.முதலில் பெத்தலான் என்ற இடத்திற்குச் செல்கின்றனர். பின்னர் அறுபது கல் தொலைவு வரை வளைகுடாவிற்குள் செல்கின்றனர். அங்கே அவர்கள் பெரிய வள்ளங்களில் இருந்து சிறிய படகுகளுக்கு மாறிக்கொள்கின்றனர். மிகுதியான வியாபாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து கூலியாட்களை ஏப்ரல், மே மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அவர்களது மொத்த வருவாயில் பத்தில் ஒரு பகுதியை மன்னருக்கு காணிக்கையாக அளித்து விடுகின்றனர். மற்றும் முத்துகுளிப்பவர்கள் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் பொழுது அவர்களைத் தாக்கிப் பெரிய மீன்கள் காயப்படுத்தாமல் இருபதற்காக கடலை மந்திரத்தால் கட்டுகின்ற கடல் கட்டிகளுக்கு இருபதில் ஒரு பங்கினை கொடுக்கின்றனர். இந்த கடல் கட்டிகள் அப்ரைமென் என்று குறிக்கப்பட்டுள்ளர்.இவ்விதம் மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புகள் தொடர்கின்றன. அனால் இங்கு நாம் கூர்ந்து உணர வேண்டியது அவர் குறிப்பிடும் "பத்தலாற்" என்ற இடத்தைத்தான். இந்த "பத்தலாற்" இலங்கையில் உள்ள புத்தளம் என்ற ஊரைக் குறிப்பதாக இருக்க வேண்டும் எனச் சில நூலாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறான முடிவாகும். முத்துகுளிப்பவர்கள் புத்தளத்தில் இருந்து புறப்பட்டனர் என்று மார்க்கோபோலோ குறிப்பிடவில்லை. முதலில் அவர்கள் "பத்தலாற்" என்ற இடத்திற்குச் செல்கின்றனர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் மார்க்கோபோலோ குறிப்பிடுகின்ற குடா பகுதி(மன்னார் வளைகுடா) நமது தரைப்பகுதியில் தான் அமைந்து இருக்கிறது. அத்துடன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலிருந்து எதிரே அறுபது மைல் தொலைவில் எதிர்க்கரையில் நடைபெரும் நிகழ்ச்சியை வர்ணித்திருக்க முடியாது. இன்னொரு செய்தி, இலங்கை கடற்கரையில் முத்துக்குளிக்கும் வழக்கம் பதினொன்றாம் நூற்றாண்டிலே இல்லை என்றும் அங்கிருந்து முத்துக்கிளிஞ்சல்கள் ஐன்ஸ் (ஆப்பிரிக்கா) நாட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டன என அல் பரூணி கி.பி.1030ல் வரைந்து இருப்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆதலால் மார்க்கோபோலோ குறிப்பிடுகின்ற "பத்தலாற்" பெரியப்பட்டினம் ஊரை கிழக்குக் கடற்கரையுடன் இணைக்கும் இயற்கையான நீர்த்தேக்கமாகிய கப்பலாறு என்பது வெள்ளிடை.கப்பலாறுதான் அவருடைய இத்தாலிய மொழிப்பிரயோகத்தில் "பத்தலாற்" ஆகியுள்ளது என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம். இந்தப்பெயர் திரிபுக்கு எடுத்துக்காட்டாகக் காயல்துறை முகத்தை, கயில் என்றும், பாண்டியன் சுந்தரபாண்டியனை, சொந்தர் பாண்தவார் என்றும் சோழ மண்டலத்தைச் "கோலி" என்றும் "ஆந்திர நாட்டு முத்துப்பள்ளியை" "முத்பிளி" என்றும் பகவான் என்பதை "பக்கவுதா" என்றும் மார்க்கோபோலோ குறிப்பிட்டுருப்பவை இங்கு சிந்திக்கத்தக்கவை.
இபுனுபதூதா ( Ibn-Battuta) குறிப்புகள்(1304-1369):
இபுனு பதூதா பெயர் ஷேக் அபு அப்துல்லாஹ் முகம்மத் இபுன் அப்துல்லா இபுன் முகம்மத் இபுன் இப்ராகிம் அல் வடலாட்டி அவர் சம்சுதீன் என்று அழைக்கப்பட்டார். இவர் மொரோக்கோ நாட்டில் டான்ஜியார் என்றும் ஊரில் 1304 ஆம் வருடம் பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்து, அவர் தன்னுடைய 21 வது வயதில் 1325 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி மார்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் எல்லா முஸ்லிம்கள் ஆண்ட நாடுகளுக்கு குறிப்பாக மேற்குக்கடற்கரை, தென் இந்தியாவில் மாபர் (தமிழ்நாடு) வங்காளம் சைனா முதலிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார் அவர் சுமார் 75 ஆயிரம் மைல் தூரம் பயணித்தவர் டெல்லியை ஆண்ட முகம்மது பின் துக்ளக் அரசவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார், பின் அவர் சீனாவிற்குத்த தூதுவராக அனுப்பப்பட்டார்.அவர் 30 வருடம் பயணித்தார். மொரோக்கோ திரும்பி சுல்த்தான் அபு இன் அரசவையில் பயண அனுபவங்களை ஒப்புவித்தார். இவை இபுன் பாதுவி வில் நேர்த்தியான பயணக்குறிப்பாகச் சொல்லப்பட்டது.மேற்கு நாடுகள் பலவற்றிற்கு சென்ற பிறகு இந்தியாவிற்கு வந்தார்.தில்லியிலும் பின்னர் மாலத்தீவில் சில காலம் தங்கி விட்டு இலங்கைக்குப் பயணமானார். வழியில் இவரது பாய்மரக்கப்பல் கடலில் விபத்துக்குள்ளாகி பாண்டிய நாட்டின் கிழக்குக் கரைக்கு(பெரியப்பட்டினம் பகுதிக்கு), கி.பி.1344 இல் வந்து சேர்ந்தார். அவரது விசாரணையில் அத்தப்பகுதி மதுரை சுல்த்தான் கியாவுத்தீன் தமகானி ஷா என்பவரது ஆட்சிக்கு உட்பட்டது என்றும், சுல்த்தானும் அவரது படைகளும் அங்கிருந்து இரண்டு நாள் பயணத்தொலைவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவருக்கு இபுனு பதூதா ஓலை அனுப்பி வைத்தார். மூன்று நாட்களில் அவர் சுல்த்தானைச் சந்திப்பதற்கு எதுவாக குதிரைகளும், பல்லக்கு அவருக்கு சுல்த்தானிடம் இருந்து வந்து சேர்ந்தவுடன் சுல்த்தானைச் சென்று சந்தித்தார். சுல்த்தானிடம் மாலத்தீவுகளைக் கைப்பற்றுவது சம்பந்தமான திட்டத்தை எடுத்துச் சொன்னார். அதற்க்கு சுல்த்தான் அவரது தளபதியை விசாரித்த பொழுது, அடுத்த மூன்று மாதங்களுக்குப் புறப்பட முடியாத சூழ்நிலையைத் தெரிவித்தார். அதனால் சுல்த்தான் இபுனு பதூதாவை பத்தனில் அதுவரை தங்கி இருக்குமாறு பணித்தார்.